திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.12 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பண் - நட்டபாடை |
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
|
1 |
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.
|
2 |
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொன்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.
|
3 |
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.
|
4 |
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
|
5 |
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
|
6 |
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயல்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
(*) முடியர் என்றும் பாடம்.
(**) நடமுன் செயும் என்றும் பாடம். |
7 |
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா(*)
முதவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
(*) குறை யில்லா என்றும் பாடம்.
|
8 |
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.
|
9 |
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.
|
10 |
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.53 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பண் - பழந்தக்கராகம் |
தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.
|
1 |
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.
|
2 |
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.
|
3 |
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
நாடுதானும் ஊடமோடி ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.
|
4 |
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்நீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.
|
5 |
சுரிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.
|
6 |
இப்பதிகத்தின் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.
|
8 |
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.
|
9 |
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.
|
10 |
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
(*)... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
(*) இச்செய்யுளின் கடைசி இரண்டடிகள் சிதைந்து போயின.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி |
நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.
|
1 |
அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.
|
2 |
ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே.
|
3 |
ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே.
|
4 |
மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.
|
5 |
மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.
|
6 |
விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே.
|
7 |
பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.
|
8 |
இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.
|
9 |
தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.
|
10 |
நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.131 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பண் - மேகராகக்குறிஞ்சி |
மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
எண்குணங்களும் விரும்பும்நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.
|
1 |
வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
புகுந்துலவு முதுகுன்றமே.
|
2 |
தக்கனது பெருவேள்வி சந்திரனிந்
திரனெச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வயல்சூழ் முதுகுன்றமே.
|
3 |
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிடம் முதுகுன்றமே.
|
4 |
இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்
பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே.
|
5 |
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதி
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகள் முகம்மலர
வயல்தழுவு முதுகுன்றமே.
|
6 |
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே.
|
7 |
கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
வாய்ந்தபதி முதுகுன்றமே.
|
8 |
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே.
|
9 |
மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்
டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரியும் முதுகுன்றமே.
|
10 |
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
நீடுலகம் ஆள்வர்தாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |